செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அந்த நாள்



பிரதீப்

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஃபேஸ் புக்கில் என்னைத் தேடி கண்டுத்தான் நண்பன் பிரதீப். நாங்கள் பள்ளித் தோழர்கள். கடந்த சனிக்கிழமை (12.2.2011) நான் அவனை சந்தித்தேன். அவனுக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பிரதீப் சொந்தத் தொழில் செய்துகொண்டிருக்கிறான்.

வீட்டுக்கு அழைத்துப் போனான். பேச்சு பழைய நாட்களுக்குப் போயிற்று. ஆல்பத்தைத் திருப்புவது போலிருந்தது.

நாங்கள் பள்ளியில் படித்த நாட்களில் அவன் நல்ல படிப்பாளி என்ற ஒரு பார்வை இருந்தது. உண்மையும் அதுதான். ஆனால்... படிப்பில் எனக்கு கெட்டப் பெயர்தான் மிச்சமிருந்தது. அந்த நாள்களில் அதெல்லாம் எனக்குப் பெரியதாக பட்டதில்லை.

நான் வகுப்பை கட்டடித்து தியேட்டரிலேயே கிடப்பேன். பத்தாம் வகுப்பில் ஒரு நாள். நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு ஒலி நாடகம் எடுக்கலாம் என்று தீர்மானித்தேன். நண்பர்களும் சம்மதித்தார்கள். அப்போதுதான் நாகர்கோவிலில் புதிதாக வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்கும் இந்த நாடகத்தை ஒலிபரப்பக் கொடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டது.

நான் கதை, வசனம் எழுதினேன். பெயர் டவுரிக் கல்யாணம். ஒரு நாள் மாலை, ஒலிப்பதிவு என் வீட்டின் வராண்டாவில் துவங்கியது. என்னுடைய டேப் ரிக்கார்டர் ஒன்று இருந்தது. பிரதீப் ஒரு பேனோசோனிக் டேப் ரிக்கார்டர் கொண்டுவந்தான். கூடவே ஒரு இசைக் கருவி. பிரதீப்பைத் தவிர அந்த இசைக் கருவியை யாருமே அதுவரை பார்த்ததே இல்லை. ஒரு குழலில் ஊதிக்கொண்டே வாசிக்கவேண்டும். அதை ஹர்மோனியம் என்றும் பியானோ என்றும் அழைத்தோம். ஆனால்... அதன் பெயர் மெலோடிகா என்பது பெரியவர்களான பிறகுதான் தெரிந்தது.

நான், பிரதீப், மனோகரன், டிவைன் கிஃப்ட், கிருஷ்ணன் எல்லோரும் மேஜையை சுற்றி நின்றுகொண்டோம். எல்லோருமே வசனம் பேசும் போது, ஒருவன் டேப்ரிக்கார்டரில் தயாராக இருக்கும் இசையை சரியான இடத்தில் ஒலிக்கச் செய்யவேண்டும். ஒருவன் மெலோடிகாவிலிருந்து ஸ்பெஷல் எஃபெக்டை கொடுக்கவேண்டும்.

நாங்கள் ஒலி நாடகத்திற்கு புதியவர்கள்., சிறுவர்கள். என்றாலும்... சரியாகவே நடந்துகொண்டிருந்தது. கடைசிக் காட்சியில் பிரதீப் திருமணத்திற்கு மந்திரம் சொல்லும் ஐயராக நடித்தான். அவன் சொல்ல வேண்டிய டயலாக் ‘பெண்ணை மணமேடைக்கு அழைச்சிட்டு வாங்கோ’ என்பதுதான். ஆனால்... அவன் சொன்னது ‘பெண்ணை மணிமேடைக்கு அழைச்சிட்டு வாங்கோ’

எல்லோரும் சிரித்துவிட்டோம். எனென்றால்... எங்கள் ஊரில் மணிமேடை என்பது ஒரு இடத்தின் பெயர். பிறகு வந்த நாட்களில்... அவன் சொன்ன வசனத்தை சொல்லியே அவனை கிண்டலடிப்பது வழக்கமாக மாறியது.

ஒரு நாள் பதிவு செய்யப்பட்ட கேசட்டை எடுத்துக் கொண்டு, கோணத்தில் இருந்த நாகர்கோவில் வானொலி நிலைத்துக்கு எல்லோருமே சைக்கிளில் போனோம்.

அங்கிருந்த அதிகாரி எங்களுக்கு ஒரு பாடமே எடுத்தார். பேப்பரில் ஒரு பக்கத்தில்தான் நாடகம் எழுதப்படவேண்டும். உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் கொண்டு வரவேண்டும். நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டால் கடிதம் அனுப்பப்படும். நீங்கள் வந்து எங்கள் நிலையத்தில்தான் நடிக்கவேண்டும். நாங்கள்தான் ஒலிப்பதிவு செய்வோம் என்று சொல்லிக்கொண்டே போனார்.

எங்களுக்கு தலைச் சுற்றியது. எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பினோம். அதுதான் நான் இயக்குனரான முதல் நிகழ்வு.

27 ஆண்டுகள் ஓடியே போய்விட்டது. நாங்கள் நினைவு ஆல்பத்தை முடி வைத்தோம். அவன் மனைவி டீ கொண்டுவந்து கொடுத்தார்கள். குடித்துவிட்டு விடைபெற்றேன்.

சிலருக்கு வாழ்க்கையை வாழ்வதே சாதனையாக இருக்கும் போது, வேறு ஒரு சாதனையை எங்கிருந்து செய்ய?