திங்கள், 31 ஜனவரி, 2011

நீங்க நல்லவரா? கெட்டவரா?



29 .01 .2011 - ராஜ் டிவி ஒளிப்பதிவுக் கூடம் - பீச் கேர்ல்ஸ் நிகழ்ச்சி.

பொழுது சாயும் நேரம் துவங்கியது... வில்லன் நடிகர் சம்பத்தின் பேட்டி. இது ஒரு லாஜிக் இல்லாத மேஜிக் நிகழ்ச்சி. இதில் கலாய்ப்பதும் - கலாய்க்கப்படுவதும்தான் முக்கிய அம்சம். இதில் வில்லன் நடிகர் எப்படி நடந்துகொள்வார் என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

நண்பன் சுகுமார் இயக்கிக்கொண்டிருந்தான் - சம்பத் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார். அவர் பதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு செட்டில் இருந்த எல்லோருக்குமே இருந்தது.

அவர் தன் வில்லன் தன்மையை மாற்றாமலே, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கூர்மையாக கவனித்தபோதுதான்... அவர் இறுக்கமாகவே கலாய்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.


கடைசி செக்மண்டில் 'நீங்கள் எதற்காக பொங்குவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

மொக்கையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்குமே ஆச்சரியம். பதில் சீரியசாக இருந்தது.

'சென்னை சாலைகளில் பைக் ஓட்டும் பலர், குழந்தைகளோடு போகும் போது, தவறுதலாக பைக் ஓட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் உயிரை மதிக்கவில்லை, ஆனால்... குழந்தையின் உயிரை மதிக்க வேண்டும். குழந்தைகளைக் கொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. மட்டுமல்லாமல், தான் ஒழுக்கம் கெட்டு நடப்பதோடு... தன் குழந்தைகளுக்கும் ஒழுக்கக்கேட்டை கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வருகிறது.'

பாஸ்... நீங்க வில்லனாக இருந்தாலும், நல்லவரு.



வியாழன், 27 ஜனவரி, 2011

திரையரங்கமாக மாறும் தேவாலயங்கள்



என் தந்தையின் வீட்டை சந்தை ஆக்காதீர்கள் - யோவான் 02:16

சந்தை மயமாகிவிட்ட உலகம் - நேர்மையை இழந்தது மனித இனம். அன்பு, காதல், கருணை எல்லாமே விற்பனை பொருளாகிவிட்ட நிலை. மனதை விற்பது அசிங்கம் என்பதை உணராத உயிர் வாழ்தல். இதையெல்லாம் தாண்டி... கடவுளை பாதிரியார்கள் விற்பதைக் குறித்து கவலைக் கொள்ளாமல் இருக்க முடியாது.

பெசன்ட் நகர் - வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வருபவர்கள் பைக்கை நிறுத்த 5 ரூபாய், ஆட்டோ -  கார் 10 ரூபாய்,  டேக்சி 15 ரூபாய், வேன் 50 ரூபாய், பஸ் 100 ரூபாய் என்று வசூல் வேட்டை நடந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை யார் வேண்டுமானாலும் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கு தனி தொகை.

இதைவிட கேவலம் காசு கொடுத்து வண்டியை நிறுத்தும்போது, வண்டி காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற நீதி மொழியை அச்சிட்டு வேறு கொடுக்கிறார்கள்.


இவ்வளவு காலம் அரசியல்வாதிகள்தான் நீதியை விற்றார்கள். இப்போது பாதிரியார்களும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அன்று: இயேசு கிறிஸ்து எருசலேமிலுள்ள தேவாலயத்துக்கு வந்தபோது, அங்கே வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களிடம் 'என் தந்தையின் வீட்டை சந்தை ஆக்காதீர்கள்' என்று சாட்டையால் அடித்துத் துரத்தினார்.

இன்று: 'நம் தந்தையின் வீட்டை சந்தை ஆக்குவோம்... வாருங்கள்' என்று பாதிரியார்கள் கூவி அழைக்கிறார்கள். இவர்களை அடித்துத் துரத்துவது யார்? விடை இல்லாத கேள்வி.

இன்னும் கொஞ்ச நாட்களில் திரையரங்கத்தைப் போல்... தேவாலயத்துக்குள் செல்ல, டிக்கட் வாங்கவேண்டிய நிலை வரலாம். ஆச்சிரியப்படுவதற்கில்லை.


கொடுமை கொடுமை என்று
கோவிலுக்குப் போனால்...
அங்கே இரண்டுக் கொடுமை
தங்கு தங்கென்று ஆடியதாம்...

என்ற பழமொழியை நிஜமாக்கிய பாதிரியார்களுக்கு மக்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும்.

"பிதாவே இவர்கள் என்னவென்று அறிந்தே செய்கிறார்கள். இவர்களை மன்னிக்காதேயும்."

வெள்ளி, 21 ஜனவரி, 2011

மனதின் அழகு வீட்டில் தெரியும்



நான் நினைத்துக் கொண்டிருந்தேன் மனது அழகாய் இருக்கும்போது வீடு அழகாய் இருக்குமென்று. சந்தோசமாக இருக்கும்போது நான் வீட்டை அழகாக வைத்திருப்பது வழக்கம். மனது மகிழ்ச்சியற்று இருக்கும்போது வீடு கலைந்து கிடக்கும்.

ஒரு முறை வீட்டுக்கு வந்தார் மாஸ்டர். (இப்படித்தான் நான் அவரை அழைப்பது வழக்கம்.) இவர் என் ஊர்க்காரர். மட்டுமல்லாமல் என் வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டவர். அன்பு நிறைந்தவர். 

வீடு கலைந்து கிடந்தது. பார்வையால் ஒரு வட்டம் அடித்துவிட்டுச் சொன்னார். "வீடு அழகாக இருந்தால் மனது அழகாக இருக்கும்."

இவ்வளவு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்ததற்கு எதிர் கோணத்தில் இருந்தது மாஸ்டருடைய கருத்து.

ஒரு காலைப் பொழுதில், கவலைக் கொள்ளும் சம்பவம் நடந்தது. அது மூன்று நாட்கள் தொடர்ந்தது. ஐந்து நாட்களில் மனம் சோர்வுக்கு அடிமையாகிப் போனது. இனி என்ன செய்வது?

மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. அரை நாளில் வீட்டை சுத்தம் செய்து அழகாக்கினேன். மனம் அழகாக மாறிற்று. கவலையும் சோர்வும் ஓடிப்போனது. ஆனால்...   இந்த வேலையைத் துவங்குவது கொஞ்சம் கடினம்தான். என்ன செய்வது? மனதை அழகுபடுத்த வீட்டை அழகுபடுத்தித்தான் ஆகவேண்டும்.

நீதி: சுத்தம் சோறு போடும்., குழம்பை நாம்தான் செய்ய வேண்டும். 

திங்கள், 17 ஜனவரி, 2011

நண்பர்களுக்கு கடன் கொடுப்பதில்லை


யேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை
துண்டுச் சீட்டில்
கொடுத்துவிட்டுப் போனான்
ஊழியக்காரன்.

மனிதன் உணவினால் மட்டுமல்ல
வார்த்தைகளாலும் ஜீவிக்கிறான் என்ற
வார்த்தைகளின் மேல்
டீயை வைத்தான் கடைக்காரன்.

வறுமை தன் ஆயுதத்தை
என் மீது பயன்படுத்துவதை
நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவன் சிரித்தபடி
கேட்டுக்கொண்டிருந்தான்.

பாதி டீயை குடித்த பிறகு
மெதுவாக சொன்னான்
நண்பர்களுக்கு
கடன் கொடுப்பதில்லையென்று.

மீதி டீயை
என்ன செய்வதென்று தெரியாமல்
கையில் வைத்துக் கொண்டிருந்தேன்.

யேசுவின் வார்த்தைகளில்
டீக் கறை வட்டமாக விரிந்துக் கொண்டே போனது.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

மாடு மேய்க்கலாம் வாங்க


(கடிகார சுற்றில் நான்கு மணி நேரத்தை காட்டிக் கொண்டிருப்பது சுகுமார்.)  


நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நண்பன் ஒருவனை தொலைபேசியல்  சந்திக்க வேண்டியதாக இருந்தது. திருமணம் ஆன பிறகு ஆண்களின் ஆட்டம் அடங்கிவிடும். ஆனால் இவன் அடங்கவில்லை. இன்னும் என்னை கிண்டலடிப்பதிலேயே இருந்தான்.

எங்கள் நட்பு பத்து வருட பழமை நிறைந்தது. நாங்கள் இருவருமே குங்குமம் வார இதழில் வேலைபார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதும் இவன் இப்படித்தான். இப்போதும் இப்படித்தான். உங்களுக்கு களைப்பாக இருந்தால் க்ளுக்கோஸ் தேவை இல்லை. இவன் பக்கத்தில் இருந்தால் போதும்.

இவனுடைய புனைப்  பெயர் க்ளைவ் பாஸ்கின். உண்மையான பெயர் சுகுமார்.  நான் அவனை ராபர்ட் கிளைவ் என்று அழைப்பதுண்டு.

இப்போது ராஜ் டிவியில் 'பீச் கேர்ல்ஸ்'  தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறான். 'அடுத்த ஆண்டு திரைப்படம் இயக்க வேண்டியதுதான்.' என்றான்.

'இந்த ஆண்டு நான் இயக்குனர் ஆகாவிட்டால் என் குலத் தொழிலை பார்க்கப் போகவேண்டியதுதான்.' என்றேன் நான்.

'உன் குலத் தொழில் என்ன?' இது அவன்.

'பனை மரம் ஏறுவது.'

'நீ உன் குலத் தொழிலுக்கு போக வேண்டாம். மாடு மேய்க்கப் போவதே சிறந்தது.' என்றான். இப்படிச் சொன்ன அவன் வாய் முகூர்த்தம், இரண்டு நாட்க்களிலேயே அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நான் பணிபுரிய காத்திருந்த திரைப்படத்தின் இயக்குனர், என்னை பணிக்கு அழைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதைத் தெரிவித்தார். சிக்கலுக்கான காரணத்தையும் சொன்னார்.

இதுவரை தமிழ் சினிமாவில்... யார் முன்னால் காரணங்கள் வைக்கப்படுகிறதோ, அவர் வெளியேற்றப்படுகிறார் என்று பொருள். எப்படியோ! ராபர்ட் கிளைவ் சொன்னதுபோல் நான் மாடு மேய்க்கப் போவது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்... சென்னையில் மாடு மேய்க்க இடம் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மேலும் ஒரு கவலை வந்துகொண்டிருக்கிறது. ராபர்ட் கிளைவ் என்னை சந்திக்க வரப்போகிறான்.

இப்போதே குபீர் என்று வேர்க்கிறது. மாடு மேய்ப்பதை விட கடினம், இவனை மேய்ப்பது.

    

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

புகைப்படம்


நீண்ட நாட்களாக ஐயப்பனை (லார்ட் ஐயப்பன் அல்ல. . . என் நண்பன் ஐயப்பன்) புகைப்படம் எடுத்துத் தருவதாகச் சொல்லி நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், ஓடிக்கொண்டிருந்த நாளை பிடித்து நிறுத்தினான் அவன். 

'இன்று அவசரமாக புகைப்படம் தேவைப்படுகிறது. எடுத்துக்கொடு.' என்றான். 

இனியும் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்க இயலாது. மனதுக்கு பிடித்தவர்களிடம் மறுப்பு தெரிவிப்பதில்லை மனம்.

அன்றைய பிற்பகலில் அவனுடைய புதிய வீட்டில் வைத்து சில புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தேன். 

சில நாட்களுக்குப் பிறகு கேட்டான். 'எல்லாரும் ஃபோட்டோ அழகாக இருக்குன்னு சொல்றாங்க. நான் என்னோட வீட்ல ஒரு படத்த பெருசா வைக்கலாம்னு நினைக்கிறேன். நீ என்னடா நினைக்கிற?'

ரசிப்பது அழகான உணர்வு., அதுவும் தன்னைத்தானே ரசிப்பது இளமையின் அழகு. தன்னைத்தானே ரசிக்காதவர்களால் அடுத்தவர்களை ரசிக்க முடியாது. பொறமைக் கொள்ளத்தான் முடியும்.  தன்னை முழுமையாய் ஏற்றுக்கொள்கிறவர்கள், அடுத்தவர்களையும் முழுமையாய் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது என் கருத்தாக இருந்தது. இதில் பாதியை ஐயப்பனிடம் சொன்னேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.

நாம் வெளியே சென்றிருக்கும் போது, நாம் வீட்டிலிருப்பது கடவுளின் தன்மை. அது நமக்கு சாத்தியமில்லை. ஆனால்... அதை ஒரு புகைப்படம் சாத்தியப்படுத்தி விடுகிறது. 

ஒரே நேரத்தில் நாம் வெளியிலும் இருக்கலாம்., வீட்டிலும் இருக்கலாம். அதற்காக நாம், உலகத்தின் முதல் புகைப்படத்தை எடுத்த நிஸ்ஃபோரே  நியேப்சுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். 

புதன், 5 ஜனவரி, 2011

மொழியறியாத வீடு


குழந்தைகளிருக்கும் வீட்டில் 
பொம்மைகளும் வசிக்கத் துவங்கிவிடுகின்றன.

கைவிடுதலும்
புறந்தள்ளுதலும்
புகார் சொல்லுதலும்
பொம்மைகளிடம் இல்லை. 

பேசுபவர்களோடு
ஒருபோதும் பேசுவதில்லை
பொம்மைகள்.

பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள்
பொம்மைகள் என்ன பேசிக்கொள்ளும்
என்பதை அறியாமலேயே
கதவு திறக்கப்படுகிறது.

மௌனத்தின் மொழியறியாத வீடு
வார்த்தைகளால் மூழ்கிக் கிடக்கிறது.

குழந்தைகளின் அழுகையை
நிறுத்தும் பொம்மைகள்
தன் அழுகையை
மௌனத்தில் மறைத்துக் கொள்கின்றன.

குழந்தைகளின் வளர்ச்சி
குப்பைத் தொட்டியை
பொம்மையின் வீடாக மாற்றுகிறது.

பொம்மைகள் அறிவதில்லை
தங்கள் வாழ்நாளை.

குழந்தையின் மனதில்
மறைத்திருக்கிறது
பொம்மையின் ஆயுள்.