வியாழன், 3 பிப்ரவரி, 2011

குடிமகனும் குடிக்காத மகனும்

சுந்தர் & கோ 


குடிமகனுக்கு முன்னால் நீங்கள் குடிக்காத மகனாய் இருந்திருக்கிறீர்களா?

'ஆமாம்' என்றால் நீங்களும் என் நண்பர்தான்.

குடிமகன் முன்னால் குடிக்காமலிருப்பது ஒரு அவஸ்த்தையான அனுபவம். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள உங்களுக்கு சில டிப்ஸ்.

குடிமகனுக்கு எதிரே உட்காரும் முன், இது தேவைதானா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

முடிவு செய்து விட்டீர்களா?

தேவைதான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.


1 - குடிமகன் குடித்தவுடன் ஒரு கிளிப்பிள்ளையாக மாறிவிடுவார்.


ஒரு கிளியோடு எப்படிப் பேசுவது என்று நீங்கள் வெட்க்கப்பட வேண்டாம். காலையில் அவர் மனிதனாக மாறிவிடுவார் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதோடு கோபப்படாமல் அவர் பேச்சைக்  கேளுங்கள்.

2 - குடிமகன் எந்த வினாடியும் உங்கள் கேள்வியை, இன்னொரு கேள்வியாக மாற்றும் வல்லமை படைத்தவர்.

அதற்காக நீங்கள் பதில் சொல்லாமல் இருக்க முடிவு செய்யாதீர்கள். அது உங்களுக்கு ஆபத்தில் முடியும். அவர் கேள்வியை கூர்ந்து கேளுங்கள். அதே நேரம், அவர் முகத்தையும் கூர்ந்து பாருங்கள். அவருக்குத் தேவையான பதிலை அவர் முகத்திலேயே வைத்திருப்பார். காப்பியடித்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

3 - குடிமகன் உங்களுக்கு பணம் தந்திருக்க மாட்டார். ஆனால்... 'நான் கொடுத்த ஐநூறு ரூபாயை திருப்பிக் கொடு.' என்று திடீரென்று கேட்பார்.


அதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியாகிவிடக் கூடாது. இங்கேதான் 'வரும் முன் காப்போம்' யுக்தியை பயன்படுத்த வேண்டும். குடிமகன் குடிப்பதற்கு முன்னாலேயே, பிறகு தருகிறேன் என்று ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

4 - குடிமகன் குடிக்கும்போது, உங்களையும் குடிக்கச்சொல்லி கெஞ்சுவார். அல்லது கொஞ்சுவார்.

பரிதாபப் பட்டால் தொலைந்தீர்கள். மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். மாட்டுக் குட்டிக்கு சத்தியம் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னால் மாட்டிக் கொள்வீர்கள். 'நான் பார்க்காத சத்தியமா? சத்தியம் எடுக்க எடுக்க ஊரும் கிணறு. எடுத்து கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.' என்று பதில் வரும். அதனால் ஆபத்தான ஒரு வியாதி இருப்பதாகச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

5 - குடிமகனுக்கு மானம் இருக்குதோ இல்லையோ, குடித்தவுடன் மானஸ்த்தனாக மாறுவார். இது ஆபத்தின் உச்ச நிலை.

அந்த நேரத்தில் நீங்கள் திரு திருவென்று இருந்துவிடக் கூடாது. நீ கவுரிமான் இனம் ஒரு முடி உதிர்ந்தாலும் இறந்துவிடுவாய் என்பதை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்.

6 - குடிமகன் ரோசக்காரராகவும் இருப்பார்.

அவர் தடுமாறிக்கொண்டு வரும்போது... உதவி செய்கிறேன் என்று நீங்கள் அவரை பிடிக்கக் கூடாது. மீறிப்  பிடித்தீர்கள் என்றால் தொலைந்தீர்கள். 'நான் சிங்கம்டா, ஃபுல் அடித்துவிட்டு ஸ்டெடியா இருப்பேன். நீ ஒரு சுண்டைக்காய்' என்று துவங்கி... பிறகு வரும் வார்த்தைகள் எல்லாமே, சென்சார் செய்யப்படக்கூடியதாக இருக்கும்.

7 - குடிமகன் உங்களுக்கு உண்மையிலேயே நண்பன் என்றால்... பொழிவதற்கு பாச மழையை வைத்திருப்பார். எதிரி என்றால்... அசிங்கமான வார்த்தைகளை வைத்திருப்பார்.

நண்பன் என்றால், நனையாமலிருக்க குடை கொண்டு செல்லுங்கள். எதிரி என்றால், காதை அடைத்துக்கொள்ள கொஞ்சம் பஞ்சைக்  கொண்டு செல்லுங்கள்.

இப்படி டிப்சை அள்ளித் தருவதினால்... என்னை வள்ளல் என்றோ! நல்லவன் என்றோ நினைத்துக் கொள்ளாதீர்கள்!

நான் கொஞ்ச நாட்களாக குடிப்பதில்லை., அவ்வளவுதான்.

4 கருத்துகள்:

VELU.G சொன்னது…

//இப்படி டிப்சை அள்ளித் தருவதினால்... என்னை வள்ளல் என்றோ! நல்லவன் என்றோ நினைத்துக் கொள்ளாதீர்கள்!

நான் கொஞ்ச நாட்களாக குடிப்பதில்லை., அவ்வளவுதான்.
//

அந்த கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாட்னவங்களோட அனுபவமா இது ஹ ஹ ஹ ஹ ஹா

ஸ்நேகிதன் சொன்னது…

தலைவா! இந்த ரகசியத்தை வெளியில யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. பிளீஸ்...

maharajan iyappan சொன்னது…

மகாராஜன் அய்யப்பன்

இதற்கு நீ குடித்திருக்கவே செய்யலாம்! குடிக்காத புலம்பலை விட இது எவ்வளவோ மேல்.
சிறு பத்திரிகைகளின் கொம்புத்தனத்தினை சற்றுத் தளரவிடக்கூடாதா நண்பா? மனிதக்கூட்டத்தை வந்தடையவும்.

ஸ்நேகிதன் சொன்னது…

நண்பா... ஒழுக்கத்தைப் பற்றி பேசும் போது, ஒழுக்கமில்லாமல் இருந்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். எல்லோருக்கும் நான் உண்மையாக இல்லாவிட்டாலும், எனக்கு நான் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.

கருத்துரையிடுக