திங்கள், 17 ஜனவரி, 2011

நண்பர்களுக்கு கடன் கொடுப்பதில்லை


யேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை
துண்டுச் சீட்டில்
கொடுத்துவிட்டுப் போனான்
ஊழியக்காரன்.

மனிதன் உணவினால் மட்டுமல்ல
வார்த்தைகளாலும் ஜீவிக்கிறான் என்ற
வார்த்தைகளின் மேல்
டீயை வைத்தான் கடைக்காரன்.

வறுமை தன் ஆயுதத்தை
என் மீது பயன்படுத்துவதை
நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவன் சிரித்தபடி
கேட்டுக்கொண்டிருந்தான்.

பாதி டீயை குடித்த பிறகு
மெதுவாக சொன்னான்
நண்பர்களுக்கு
கடன் கொடுப்பதில்லையென்று.

மீதி டீயை
என்ன செய்வதென்று தெரியாமல்
கையில் வைத்துக் கொண்டிருந்தேன்.

யேசுவின் வார்த்தைகளில்
டீக் கறை வட்டமாக விரிந்துக் கொண்டே போனது.

2 கருத்துகள்:

dashboard சொன்னது…

படிச்சதும் எழுதத் தோணிய ஒரு கவிதை:

சாகும் தருவாயில் இருந்த
அப்பா சொன்னார்...
"எம் பையன் பொழச்சுக்குவான்...
படிப்பில்லின்னாலும் அவன் புத்திசாலி..."
பையன் சொன்னான்...
"செத்தாலும் எங்கப்பன்
சொத்த மட்டும் தரமாட்டான்..."

ஸ்நேகிதன் சொன்னது…

கவிதைக்கு கவிதை எழுதிய புலவரே நீர் வாழ்க. உமது புகழ் பெருகுக வையகம்.

கருத்துரையிடுக